Friday, January 24, 2020

Satsangam - Thai Amavaasai post

வணக்கம்.

இன்று (24-01-2020), வெள்ளிக்கிழமை, தை அமாவாசை இரண்டும் சேர்ந்த புனித நாள்.

அரசன் ஒருவன், "இன்று என்ன நாள்?" என்றான், அம்பிகையை தியானித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர், "இன்று பௌர்ணமி" என்று சொன்னார். கோபம் கொண்ட அரசன், "இன்று மாலை, நிலவு வருமா?" என்றான் அரசன். அம்பிகையின் பூரண சந்திர வதனத்தை, மனக்கண்ணில் கண்டு வந்த பட்டரோ, "அதற்கு என்ன? நிலவு வரும்." என்றார். ஒருவேளை நிலவு வரவில்லை எனில், தண்டனைக்கு உரியவனாவாய் என்றான் அரசன்.

மாலை வேளை வந்தது. வானில் நிலவு வரவில்லை. அபிராமி பட்டருக்கு, எல்லாமே அம்பிகை தான். அவர் வாயில் இருந்து வந்த வாக்கும், அந்த வாக்தேவியின் வாக்கே என்று நம்பிக்கை கொண்டிருந்தார். அன்னை அபிராமியை வணங்கி, பாடல்களைப் பாடத் தொடங்கினார். அப்பாடல்களே அபிராமி அந்தாதி. 79 ஆவது பாடலைப் பாடினார்.

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

இப்பாடலின் பொருள்:

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. அப்படி இருக்க, பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனித் தொடர்பு வேண்டுமா? வேண்டவே வேண்டாம்.

இப்பாடலைப் பாடியதும், அன்னை, தன் அணிகலன் ஒன்றைக் கழற்றி, வானில் வீச, முழு நிலவாய், மாலை வானில் மிளிர்ந்தது. அரசன் முதலிய அனைவரும் அதிசயித்தனர். பட்டரின் விழியும் மனமும் குளிர்ந்தது.

ஸத்ஸங்கம் (நல்லாரோடு கூடுதல், சேர்தல்) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் பாடலாக எனக்குத் தோன்றுகிறது. ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் ஸ்தோத்திரத்தில்,

ஸத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்
நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி:

என்கிறார்.

ஸத்சங்கத்தில் இருந்தால் பற்றை விடலாம். பற்றை விட்டால் அழிவு வராது. அழிவு இல்லை எனில், அறிவு வரும். அறிவு வந்தால், முக்தி பெறலாம்.

திவ்ய ப்ரபந்தம் - முதல் திருவந்தாதி, பொய்கை ஆழ்வார் எழுதியதில், பத்தாம் திருமொழி, ஐந்தாம் பாடலில்,

நா வாயில் உண்டே நமோநாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகை உண்டே, என்னொருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்.

நம் வாயில், நாக்கு உள்ளது. அதனால் "நமோ நாரணா" என்று பகவன் நாமத்தை, மந்திரத்தைச் சொல்லக்கூடிய திறம் உண்டு. மாறுதல் (அழிவு) இல்லாத நல்ல வழிக்குச் செல்லும் வழியும் உண்டு. அப்படி இருக்க, தீய வழியில் எதற்காக ஒருவர் செல்ல வேண்டும்? அப்படி விழும் அவர்கள் திறமைத்தான் என்னே!

என்று பாடுகிறார்.

ஆண்டாள் நாச்சியாரும், திருப்பாவைப் பாடல்களில், கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்று கூடாரை வெல்லும் சீர் பாடலில் பாடுகிறார். சங்கத் தமிழ் மாலை என்றே சொல்கிறாள். சங்கம் என்றால் கூட்டம். எல்லோரும் சேர்ந்து, இறைவனை வழிபட்டு, பெற்ற பேற்றினைப் பற்றிப் பாடுகிறாள். பகவத் கைங்கர்யம் என்பதே அந்தப் பேறு.

எல்லாரும் ஒன்று சேர்ந்து, நல் வழியில் செல்ல வேண்டும் என்று தான் நம் பெரியோர்கள், முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர்களது வாக்கைப் புரிந்து கொண்டு, நல்ல வழியில் நாமும் சேர்ந்து செல்வோம்.

ஸத்சங்கம் எல்லாருக்கும் கிட்ட, இறைவன் அருள் வேண்டி,
சரண்யா