Thursday, February 14, 2019

ஆழ்வார்கள் நால்வரின் பாடல்களில் உள்ள ஒற்றுமை

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் முதல் ஆழ்வார்கள் மூவர் என அழைக்கப்படுவார்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமழிசை ஆழ்வார் அவர்களும் இம்மூவர் காலத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் உள்ள திருவெக்கா என்னும் தலத்தில் அவதரித்தவர்.
பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை என்னும் மகாபலிபுரத்தில் அவதரித்தவர்.
பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தவர்.

இம்மூவரும் திருக்கோவலூர் என்னும் தலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். ஒவ்வொருவரும் திருமால் மேல் நூறு பாடல்கள் (அந்தாதியாக) பாடினார்கள். முறையே முதல் (1), இரண்டாம்(2) மற்றும் மூன்றாம் (3) திருவந்தாதி என அழைக்கப்படும்.

திருமழிசை ஆழ்வார், சென்னை - திருவள்ளூர் இடையே அமைந்திருக்கும் தலமான திருமழிசை என்னும் ஊரில் அதே காலகட்டத்தில் அவதரித்தவர். திருச்சந்த விருத்தம் என்னும் 120 பாடல்களையும், நான்முகன் திரு அந்தாதி என்று 96 பாடல்களையும் பாடியுள்ளார். நான்முகனை என்று அந்த தொகுப்பு தொடங்குவதால், நான்முகன் திருவந்தாதி என்று கூறப்படுகிறது. நாலாம் (4) திருவந்தாதி என்றும் கூறுகிறார்கள்.

முதல் ஆழ்வார்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். ஆனால் திருமழிசை பிரான், இவர்களைச் சந்தித்தாரா என்பது தெரியவில்லை.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியில், பத்தாம் திருமொழியில் உள்ள ஒன்பதாவது பாடலின் (1.9.9) முதல் இரண்டு வரிகளும், பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில், நான்காம் திருமொழியில் உள்ள பத்தாவது பாடலின் (3.4.10) முதல் இரண்டு வரிகளும் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில், ஒன்பதாம் திருமொழியின் ஆறாம் பாடலின் (4.9.6) முதல் இரண்டு வரிகளும் ஒரே வரிகளாக உள்ளன. முறையே கீழே பார்ப்போம்.

பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி - 10 ஆம் திருமொழி - பாடல் 9

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளனென்று ஓர்

பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - 4 ஆம் திருமொழி - பாடல் 10

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்
விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்ணொடுங்கத் தானளந்த மன்

திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி - 9 ஆம் திருமொழி - பாடல் 6

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன்காண் தமியேற்(கு)
என்னொப்பார்க்(கு) ஈசன் இமை

இது போல, பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி, இரண்டாம் திருமொழி, முதல் பாடலின் (2.2.1) எல்லா வரிகளும், திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி, ஆறாம் திருமொழி, ஐந்தாம் பாடலின் (4.6.5) எல்லா வரிகளும் ஒத்துப் போகின்றன.

கடைநின்(று) அமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் - புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அவர்

பெரியோர்களின் மனம் ஒன்றையே நினைக்கிறது. அந்த ஒன்றையே பாடுகிறது. அது சில சமயங்களில், அவர்கள் வாக்கு மூலமாக தெளிவாக நமக்குத் தெரிய வருகிறது. ஒருவரையொருவர் சந்தித்தாலும், சந்திக்காமலும் எப்படி ஒரே வரிகளை இவர்கள் பாடியுள்ளார்கள்? இறைவனின் கிருபை என்று சொல்வதை விட வேறென்ன!

Great Minds think alike!

2 comments:

M.Narasimha Murthy. said...

Yes very true..என்றும் மாறா உண்மை வார்த்தைகள் பெரியோர் நெஞ்சில் உதிப்பதியல்பே. அருமை பதிவு,அறிவு சார் விளக்கங்கள்..பகிர்ந்லமைக்கு நன்றி. சரண்.

M.Narasimha Murthy. said...

Yes very true..என்றும் மாறா உண்மை வார்த்தைகள் பெரியோர் நெஞ்சில் உதிப்பதியல்பே. அருமை பதிவு,அறிவு சார் விளக்கங்கள்..பகிர்ந்லமைக்கு நன்றி. சரண்.